search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவண்ணாமலை விவசாய சங்க நிர்வாகிகள் கைது"

    பசுமை வழிச்சாலைக்கு எதிராக கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்ததாக திருவண்ணாமலை விவசாய சங்க நிர்வாகிகள் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    சேலம்-சென்னை இடையே 277 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக 8 வழி பசுமை சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்படுகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கி.மீட்டர் தூரம் இந்த சாலை அமைகிறது. இதனால் 92-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது.

    8 வழிச்சாலை திட்டத்திற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் கையகப்படுத்த உள்ள நிலங்களின் சர்வே எண், பரப்பளவு, நிலத்தின் வகை போன்ற விபரங்களை அதிகாரப்பூர்வமாக நேற்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டது.

    அதில் 7 ஆயிரம் குடும்பங்களுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்கள், வீடுகள், பாசன கிணறுகள் இடம் பெற்றுள்ளன.

    அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களை மிகவும் குறைவாகவே கையகப்படுத்த உள்ளனர். இந்த அறிவிப்பு பொது மக்களிடையே கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

    திருவண்ணாமலை, செங்கம், கலசப்பாக்கம், சேத்துப்பட்டு, வந்தவாசி ஆகிய தாலுக்களில் உள்ள கிராம மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கையகப்படுத்தப்படும் நிலங்களின் உரிமையாளர்கள் ஆட்சேபனைகள் தெரிவிக்க 21 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    ஆனாலும் அதற்கு முன்பாகவே நிலத்தின் எல்லைப் பகுதியை குறியிடும் பணியை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இன்னும் சில நாட்களில் கையகப்படுத்தப்படும் நிலங்களில் குறியீடு பதித்த கற்களை நடும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் நிலம் கையகப்படுத்தும் போது போராட்டம், எதிர்ப்பு இருந்தால் அதை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்த திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் கந்தசாமியுடன் எஸ்.பி. பொன்னி சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது 8 வழிச்சாலை திட்டத்துக்காக போராட்டம் நடத்த அனுமதி அளிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் திருவண்ணாமலை வடஆண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள மணிலா உடைக்கும் கமிட்டி கட்டிடத்தில் இன்று காலை விவசாயிகள் சங்கம் சார்பில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்வதாகவும்.

    இதில் பசுமை வழிச்சாலைக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது தொடர்பாக முடிவு செய்ய இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து மங்கலம் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன், துணை செயலாளர் பலராமன், ஜெயபால், உமாபதி, தஞ்சன், ஏழுமலை, சின்னபையன், சூரியபிரகாஷ், சின்னராஜ் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கூட்டம் நடைபெற இருந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    ×